அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 31 December 2012

சிறுவர்களுக்கான‌ ஓவியப்போட்டி


 "என் இனிய இல்லம்" ஃபாயிஜா, குழந்தைகளுக்கான வரைபட போட்டி அறிவித்து ஒரு மாதமாகியும் இதோ.. அதோ.. என அலட்சியமாக இருந்து, கூடவே பல தடங்கல்கள் வந்து, போட்டி முடியும் கடைசி நேரத்தில் எப்படியாவது நானும் வரைய வேண்டும் என்று செல்ல மகன் ஆசையோடு அடம்பிடிக்கவே.. நஃபீஸ் உடைய 'இயற்கைக் காட்சி' ஓவியத்தினையும் ஒருவாறாக போட்டிக்கு அனுப்பியாச்சு :) போட்டிக்கு அனுப்பவேண்டிய‌ நேரம் முடிந்துவிட்டதால், (இனி யாரும் இதைப் பார்த்து காப்பியடிக்க முடியாது என்ற தைரியத்தில்) :) மகன் வரைந்த படத்தினை இங்கே பிற்ச்சேர்க்கையாக சேர்த்துள்ளேன்.

அவர் வரைந்த படம் இதோ:

Saturday 22 December 2012

நீங்கா நினைவுகள்! (ஹ‌ஜ் ‍- 3)


முதல் பாகத்தை இங்கே காணலாம்
இரண்டாவது பாகம் இங்கே  

இதோ... சற்று தூரத்தில் அழகிய மின் அலங்காரத்தோடு கூடிய‌ ஆர்ச் ஒன்று மக்காவின் எல்லை வந்துவிட்டதை அடையாளம் காட்டுகிறது.


Friday 14 December 2012

நீங்கா நினைவுகள்! (ஹ‌ஜ் ‍- 2)



...... எப்போது மீகாத் (எல்லை) வரும் என்று மணிக்கொரு முறை கணக்கிட்டுக் கொண்டே வந்து... அந்த நேரமும் நெருங்கிவிட்டது.

ஜித்தா நகருக்கு மேலிருந்து வான்வழி காட்சி

Monday 10 December 2012

நீங்கா நினைவுகள்! (ஹ‌ஜ் ‍- 1)

    வ்வுலகில் நாம் எத்தனையோ விஷயங்களை கற்பனையில் சுமந்துக் கொண்டு 'இதுவும் நடக்குமா?' என மனக்கோட்டைக் கட்டி வைத்திருப்போம். அவற்றில் சிலவற்றுக்கு நம் மனதில் அதி முக்கியத்துவம் கொடுத்து, தொடர்ந்து அதற்காக பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம். ஆனால் அவை எல்லாமே எல்லோருக்கும் நடந்துவிடுவதில்லை. அப்படி ஏதேனும் சில விருப்பங்கள் நடந்துவிட்டால்..? அதை இறைவன் நாடிவிட்டால்..? அந்த அனுபவமும், அதனால் ஏற்பட்ட உணர்வுகளும் எவ்வளவு இனிமையாக இருக்கும்..!!

'யான் பெற்ற‌ இன்பம் பெறுக இவ்வையகம்' என்று ஒற்றை வார்த்தையில் வாழ்த்து சொல்லி செல்வதைவிட அந்த அனுபவத்தையே சொல்லும்போது, நம்மைப்போல் அதை விரும்பிய பலருக்கும் மேலும் உற்சாகம் ஊட்டக்கூடியதாக இது அமையலாம்! அதன்மூலம் அவர்களும் அந்த இன்ப அனுபவத்தை அடைய முயற்சிக்கலாம். எனவே எதிர்பார்த்து.. எதிர்பார்த்து, ஏங்கிக் கிடைத்த அந்த பாக்கியத்தை, அனுதினமும் நினைத்து நினைத்து சந்தோஷத்துடனும் திருப்தியுடனும் இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருக்கும் அந்த‌ இனிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

  

Friday 16 November 2012

முஹர்ரம் (பத்தாவது நாள்) ஆஷூரா நோன்பு


முந்திய பதிவைப் பார்க்கவும்.

ஹுஸைன்(ரலி) அவர்களின் நினைவாகதான் முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பு நோற்கிறோம் என்ற ஒரு தவறான நம்பிக்கை சில இஸ்லாமியர்களிடத்தில் உள்ளது. ஆனால் இந்த நாளில், இஸ்லாமிய வரலாற்றில் இரண்டு விதமான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒரே நாளில் நடந்த அந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் எந்த அடிப்படையில் நாம் தீர்மானிக்க‌வேண்டும்?

ஆண்டு தோறும் அனுஷ்டிக்கும் துக்கம்(?!)


முஹர்ரம் மாதத்தில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளையும், முஸ்லிமான ஒவ்வொருவரும் அவற்றை விட்டும் முழுமையாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் முந்திய பதிவுகளில் பார்த்தோம். அப்படியானால், நபி(ஸல்) அவர்களின் அருமைப் பேரரான ஹுஸைன்(ரலி) அவர்கள் கொல்லப்பட்ட நாளை எப்படி நினைவு கூர்வது? அந்த நாளை துக்க நாளாக எந்த முறையில்தான் அனுஷ்டிக்க வேண்டும்? இப்படியாக சில கேள்விகள் நம் சகோதரர்களிடத்திலே தோன்றுகிறது. இன்னும் சிலரோ, ஹுஸைன்(ரலி) அவர்களுக்காகதான் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பு நோற்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது, இஸ்லாமிய வரலாற்றில் உயிர்நீத்த இறையடியார்களுக்காக‌ (நினைவு நாளாக) துக்கம் அனுஷ்டிக்கலாமா? என்பதுதான்.

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 3)

முதல் பாகத்தைக் காண‌இரண்டாம் பாகத்தைக் காண‌

முந்திய இரண்டு பகுதிகளில் நாம் கண்ட மூடத்தனங்களும், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் எல்லாம் தெளிவான வழிகேடும் இணை வைப்புமாகும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆக, ஹுஸைன் (ரலி)அவர்களின் நினைவாக செய்வதாகக் கூறி இந்த முஹர்ரம் மாதத்தில் ஷியாக்கள் செய்யும் அட்டூழியங்களினால், அல்லாஹ்வின் கணக்கிலே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் சென்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். (அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!) இது ஒருபுறமிருக்க, 'சுன்னத் வல் ஜமாஅத்' அமைப்பினர் இதுவரை நாம் கூறிய‌ ஷியாக்களின் சடங்குகளை தவிர்ந்துக் கொண்டாலும், வேறுவிதமான பெயர்களில் வழிகேடான‌ காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றில் தமிழக அளவில் பிரசித்திப் பெற்றது 'ஹஸனார் ஹுஸைனார் ஃபாத்திஹா' வாகும்.


முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 2)

முதல் பாகத்தை இங்கே பார்க்கவும்.

தொடர்ந்து ஐந்தாவது ஆறாவது நாட்களில் கர்பலா சம்பவங்கள் பற்றி கூறும் நிகழ்ச்சியும், சோக பாடல்கள் மூலம் அந்த துக்கங்களைப் புதுப்பித்துக் கொள்வதும் நடைபெறும். வளரும் பருவத்திலுள்ள சின்னஞ்சிறிய பாலகர்களிடம் கூட இவற்றை மனதில் பதிய வைத்து, அன்றைய தினம் மேடையேறி பாடி அழவைக்கும் கோலங்கள் நடைபெறும்.

பத்தாம் நாளுக்கு முன்னதாக ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவ‌து நாட்களிலும் ஊர்வலம் புறப்படும். இந்த ஏழாம் நாள் பஞ்சாவில் ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) நினைவாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்து, அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறம் என்று நம்பப்படும் பச்சை நிறத் துணியால் போர்த்தப்பட்டு அதில் இரண்டு இளைஞர்கள் அமர்த்தப்படுவார்கள்.


முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 1)

புது வருடத்தை அடைந்திருக்கும் நாம், இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதத்தைப் பற்றியும் அந்த மாதத்தில் இஸ்லாமிய மக்களில் சிலர் செய்துவரும் மூடப் பழக்கங்களையும் பற்றியும் இப்போது பார்ப்போம்.

இஸ்லாத்தில் (போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட) நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும். இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்தான், இந்த மாதத்திற்கு மெருகூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டால் மார்க்கத்தின் பெயரால் பல்வேறு அனாச்சாரங்கள் நம் மக்களிடையே அரங்கேறுவதைப் பார்க்கிறோம். அந்த பத்தாம் நாளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதை விடுத்து, இந்த மாதத்தில் இஸ்லாம் கூறாத பல்வேறு அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் மக்களிடையே கடைப்பிடிக்கப்படுகின்றன.

                                                   

Tuesday 23 October 2012

ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்க‌ள் (2012)


ஏகனான இறையவனின் ஏவலினைச் செய்ய‌
        எங்கள் நபி இப்ராஹீம் எழுந்தனர் வாளேந்தி
செங்குருதி கண்ணெதிரே செம்மையுடன் பாய்ச்சும்
        சிந்தையுடன் தம் மகனைத் தியாகமிடச் சென்றார்!

    அந்த பெரும் நினைவாலே அல்லாஹ்வின் பேரில்
        அல்லலுறும் மாந்தருக்குத் தியாகமென்னச் செய்தோம்?
   அந்தமிகும் வாழ்விதனில் கொஞ்சமேனும் செய்ய‌
       இந்தப் பெருநாளிலே வாக்குறுதிக் கொள்வோம்!

"அல்லாஹு அக்பர்" என்ற தக்பீரை மொழிந்து
         அல்லாஹ்வின் நினைவோடு அணிவகுத்து நின்று
உள்ளோரும் இல்லாரும் உளங்கனிந்து வேண்டும்
         உயர்வான "அரஃபாத்"தைக் கொண்ட திருமாதம்!

    மாந்தரினில் "ஹஜ்"ஜுக்குச் சென்றுவரும் பேற்றை
        மறையவனே! பல்லோர்க்கும் மகிழ்வுடனே அளித்தாய்!
பாங்கு தரும் கடமைகளில் ஐந்தாவதனில் - யாம்
         பங்குபெற வாழ்வில் ஒருமுறையேனும் அருள்வாய்!

மங்கிவரும் ஒழுக்கங்களில் மறு மலர்ச்சியோடும்
     மங்காத நபி வழியில் மன எழுச்சி வேண்டும்!
  பொங்கும் மறைப் போதனையில் சிந்தையுடன் செயலும்
        பொருளினையும், நீண்டதொரு ஆயுளினையும் தருவாய்!

'குர்ஆனி'ன் கட்டளையைத் தம் மனதிற் கொண்டு
   'குர்பானி'யை மதிப்பறிந்து செய்யும் திருநாளில்
"உன்னத ஓர் இறையவனைச் சிரம் வணங்கிப் போற்றும்
  உலகமெலாம் வாழ்க!"வென வாழ்த்து நவில்கிறேன்!

கவிதை ஆக்கம்: 
(மறைந்த) எனத‌ன்புத் தந்தை, 
S. முஹம்மத் இஸ்ஹாக், B.A. 

Monday 15 October 2012

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் (பகுதி 3)



முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதியைப் பார்க்கவும்.


பங்கிடும் முறை

சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை. இவ்வாறுதான் கொடுக்கவேண்டும், இவ்வளவுதான் உண்ணவேண்டும் என்ற வரம்பு எதுவும் இல்லாததால், அவரவர் விரும்பிய அளவு தர்மம் செய்யலாம். அதேசமயம், இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக்கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்கவேண்டும்.

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் (பகுதி 2)



முதல் பகுதி மற்றும் மூன்றாம் பகுதியைப் பார்க்கவும்.

அடையாளமிடுதல்

அதிகமான ஆடுகளையும் மாடுகளையும் வைத்திருப்பவர்கள் குர்பானிக்கு பொருத்தமானதை அவற்றில் தேர்வுசெய்து அதற்கு அடையாளம் இட வேண்டும். அப்படியில்லாமல் பெருநாளன்று இருக்கும் கால்நடைகளில் கையில் கிடைக்கும் ஏதாவது ஒன்றைப் பிடித்து அறுத்துவிடக் கூடாது. அடையாளம் இடுவது கட்டாயம் இல்லையென்றாலும் முறையாக தேர்வு செய்யப்பட்ட‌ குர்பானிப் பிராணி மற்றப் பிராணிகளுடன் குழம்பிக் கொள்ளாமல் இருப்பதற்காகவும், குர்பானிக் கொடுப்பதை ஏழைகள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்)அவர்கள் காலத்தில் அடையாளமிடக்கூடிய‌ வழக்கம் இருந்தது. இன்று பெரும்பாலும் குர்பானிக்கென்று பிரத்யேகமாக பிராணிகள் வாங்கப்படுவதால் அடையாளமிட வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் அறுக்கும் அன்று வரை விற்பவர்களிடத்திலேயே விட்டு வைப்பவர்களும், அதிக எண்ணிக்கையில் வைத்திருப்பவர்களும் இம்முறையைக் கையாளுவதே சிறந்தது.

குர்பானி கொடுப்பதின் சட்டங்கள் (பகுதி 1)


இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றான "ஹஜ்" கடமையை நிறைவேற்ற உலகின் அனைத்து திசைகளிலுமுள்ள இஸ்லாமியர்கள் கஃஅபத்துல்லாஹ்வை நோக்கிப் புனிதப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் இந்நிலையில், நாம் துல்ஹஜ் மாதத்தை விரைவில் (இன்ஷா அல்லாஹ்) அடைய இருக்கிறோம்.

Sunday 14 October 2012

ஹஜ் - உம்ராவுக்கான சட்டங்கள் (பாகம் 1)


'ஹஜ் யாருக்கு கடமை?', 'ஹஜ்ஜின் சிறப்புகள், பலன்கள் எவை?' போன்ற இதர விஷயங்களைக் கூறமுன், இந்த வருட ஹாஜிகளுக்கு ஹஜ்ஜின் நேரம் நெருங்கிவிட்ட காரணத்தினாலும், ஆதாரங்களோடு கொடுக்காமல் அதன் சட்டங்களை மட்டும் கொடுத்தால் (உடனுக்குடன் எடுத்துப் பார்த்துக்கொள்ள) ஒரு குறிப்பேடாக பயன்படும் என்பதாலும், பிரிண்ட் பண்ணும் வசதிக்காகவும் இதில் 'உம்ரா' மற்றும் 'ஹஜ்'ஜுடைய சட்டங்கள் மட்டும் வரிசைப்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. (அதற்கான ஹதீஸ் ஆதாரங்கள் இன்ஷா அல்லாஹ் பிற்ச்சேர்க்கையாகவோ, வேறொரு பதிவாகவோ பின்னர் கொடுக்கப்படும்.) அத்துட‌ன், சுலபமாக புரிந்துக் கொள்வதற்காக தேவையான இடங்களில் அட்டவணைகளும், சில படங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ள‌ன. இதன் மூலம் தவறுகள் இல்லாத சரியான, நபிவழியில் அமைந்துள்ள 'ஹஜ் - உம்ரா'வின் அமல்களை அனைவரும் செய்வதற்கு அல்லாஹ் உதவி செய்வானாக!

ஹஜ் - உம்ராவுக்கான சட்டங்கள் (பாகம் 2)



ஹஜ்ஜுக்காக 3 வகையாக இஹ்ராம் கட்டலாம். அவை,

ஹஜ் தமத்துஃ
 
முந்திய பதிவில் கண்டவாறு உம்ராவை முடித்துவிட்டு, ஹஜ்ஜுக்குரிய இஹ்ராம் கட்டுகின்றவரை இஹ்ரமிலிருந்து விடுபட்டு, மீண்டும் ஹஜ்ஜுக்காக துல்ஹஜ் பிறை 8 ல் இஹ்ராமில் நுழைந்து ஹஜ்ஜை நிறைவேற்றும் முறைக்கு "ஹஜ் தமத்துஃ" என சொல்லப்படும். இந்த முறையில் ஹஜ் செய்பவர்கள், இஹ்ராம் இல்லாத அந்த இடைப்பட்ட நாட்களில் மக்காவிலேயே தங்கியிருக்கவேண்டும். (இந்த முறையே சிறந்தது.)

Saturday 13 October 2012

ஹஜ்ஜும் உம்ராவும் பூரணமடைவது எப்போது?


இஸ்லாமிய மாதங்களில் உள்ள நான்கு புனித மாதங்களில் ஒன்றான துல்ஹஜ் மாதம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இறுதிக் கடமையாம் ஹஜ் கடமையை நிறைவேற்ற தயாராகிக் கொண்டிருப்பவர்கள் தங்களின் நாடு, மொழி, இனம், நிறம், கோத்திரம், செல்வாக்கு போன்ற அனைத்து வேறுபாடுகளையும் மறந்து நாமனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற ஒருமித்த உணர்வுடன் ஒன்றுகூட இருக்கிறார்கள்! அப்படிப்ப‌ட்ட அற்புதமான ஒரு உலகமகா மாநாடாக திகழக்கூடிய 'ஹஜ்'ஜிலே இறைவன் வகுத்துள்ள சட்டங்களை, அவனுடைய தூதர்(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியிலே மட்டுமே நிறைவேற்றும்போதுதான் அதன் முழுமையான பலன்களை நாம் அடைந்துக்கொள்ள முடியும், இன்ஷா அல்லாஹ்!

Friday 5 October 2012

"முஹம்மத்" - யார் இவர்?


முன்குறிப்பு: தமிழக முஸ்லிம்களில் பலர் நபி (ஸல்) அவர்கள் பற்றியும், இஸ்லாம் பற்றியும் குறிப்பேடுகள் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எப்படி தயாரிப்பது, எப்படி பிரிண்ட் செய்வது, தவறுகள் வந்தால் என்ன செய்வது போன்ற விஷயங்களால் அந்த ஆர்வம் பேச்சுடன் முடிந்து விடுகிறது. இஸ்லாம் பற்றி எப்பொழுதெல்லாம்...

"... மேலும் வாசிக்க" இங்கே க்ளிக் பண்ண‌வும்.

Monday 1 October 2012

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுரை!


லகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டுக் கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம்!

Thursday 27 September 2012

உலக அறிஞர்களின் நேரிய பார்வையில்....



வாழ்வில் அனுபவப்பட்ட அறிஞர்கள் நடுநிலையோடு சிந்தித்து ஒரு உத்தம‌ரைப் பற்றி சொல்லும் உண்மைக் கருத்துக்கள் உலக மன்றத்தில் மறைக்கப்படாமல் இருக்க அவற்றை வெளிக்கொண்டு வருவது அவசியமாகிவிடுகிறது. அத்தகைய ஒரு மாமனிதரைப் பற்றிய உலக அறிஞர்களின் கருத்துக்கள் அவரைப் பற்றி மென்மேலும் அறிய ஆவல் ஏற்படுத்தக்கூடியவை. இவை ஒரு பகுதி மட்டுமே! நீங்களும் படித்து கலங்கமில்லா ஒருவரின் எதேர்ச்சையான நிலையைப் புரிந்துக் கொள்ள உங்கள் முன் இந்தப் பதிவு:

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றுமுழுதும் ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும்! மனித குலம் முழுவதும் பின்பற்றத்தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத் தன்மையை தெளிவாக்கியுள்ளது.
       – டாக்டர் ஜான்சன்

Thursday 20 September 2012

இஸ்லாத்தின் பெருமையுணர்ந்த தற்கால எதிரிகள்!


சென்ற வார சர்ச்சையாளன் அமெரிக்க கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் (Terry Jones), இந்த வாரம் ஃபிரெஞ்சு பத்திரிக்கையாளன் Charb என்று அழைக்கப்படும் Stéphane Charbonnier! இவன் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் எனச்சொல்லி நிர்வாணப் படமாக‌ தனது பத்திரிக்கையில் நேற்று (19.09.12) வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து ஃப்ரெஞ்ச் அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கையாக உலகெங்கிலும் உள்ள ஃப்ரெஞ்ச் தூதரகங்களில் இதுவரை 20 க்கும் மேற்பட்ட தூதரகங்களுக்கும், ஃப்ரெஞ்ச் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

Tuesday 21 August 2012

ரமலானுக்குப் பிறகு..

மாற்றம் வேண்டாமே!

சிறப்புமிகுந்த‌ ரமலான் மாதம் நம்மைவிட்டு சென்று, ஷவ்வால் மாதமும் ஆரம்பித்து விட்டது. ரமலான் மாதத்தில் பள்ளிகளெல்லாம் நிறைந்திருந்தும், பள்ளிக்கு செல்லமுடியாமல் வீட்டிலேயே இருந்த மக்களும் கூட‌ நல் அமல்கள் செய்வதில் ஆர்வம் காட்டியும், சின்ன சின்ன தவறுகளிலிருந்தும் கூட தூரமாக இருக்கவேண்டும் என்று மக்கள் மிகுந்த கவனமுடன் இருந்தார்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இவ்வாறுதான் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்க வேண்டும்.

யார் மரணிக்கும் வரை அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு, அந்த கட்டுப்பாட்டிலேயே உறுதியாக‌ வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவரின் மரண நேரத்தில் வானவர்கள் இறங்கி, மேலும் வாசிக்க...

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஷவ்வால் மாத (ஆறு) நோன்புகள்

ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரக்கூடிய மாதமான‌ ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றாகும். இந்த ஆறு நோன்புகளையும் நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கும். மேலும் வாசிக்க...


Saturday 18 August 2012

மீண்டும் வந்துவிடு.. இனிய‌ ரமலானே!


போய் வா ரமலானே...! போய் வா!
மனமின்றி வழியின்றி விடை தருகிறோம்
மனமுருகி இறையோனை வேண்டுகிறோம்
மீண்டும் நீ எங்களிடத்தில் வந்திடவே....
மறு ஆண்டும் உனை நாங்கள் நோற்றிடவே!

Friday 17 August 2012

'ஃபெரீக்' ஷொர்பா (شربة فريك) - அல்ஜீரியன் கஞ்சி


ரமலானில் நோன்பு திறக்கும் (இஃப்தார்) நேரங்களில் சாப்பிடக்கூடிய உணவுகளில் முக்கியமான இடத்தில் உள்ளது "கஞ்சி"தான்! பெரும்பாலான நாடுகளில் அவரவர் உணவு வழக்கத்திற்கு ஏற்றார்போல் ஏதாவது ஒரு கஞ்சி வகையை இஃப்தாருக்கென தயார் செய்துக் கொள்கிறார்கள். ஏனெனில் அதிகாலைப் பொழுதிலிருந்து பகல் முழுவதும் ஒரு மிடரு தண்ணீர்கூட அருந்தாமல் சூரியன் மறையும்வரை இறைவனுக்காக உண்ணா நோன்பு இருந்துவிட்டு, இறைவன் அனுமதித்த நேரமான சூரியன் மறைந்தவுடனே நோன்பை முடித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பிக்கிறோம். அப்போது சுவையறியும் நாவில் ஆரம்பித்து, உணவுக் குழாய், வயிறு என அத்தனையும் நீண்ட நேர‌ ஓய்வில் இருப்பதால் எளிதாக செரிமானம் ஆகக்கூடியதும், சுலபமாக தயாரிக்கக்கூடியதும், முடிந்தவரை சத்துக்கள் அதிகம் நிறைந்ததும், கூடவே சுவையானதுமான‌ :) உணவை நாம் எடுத்துக் கொள்வது அன்றைய பொழுதின் முதல் வேலை உணவான இஃப்தாரில் இதமானதாக இருக்கும்; ஆரோக்கியத்திற்கும் நல்லது!

Thursday 16 August 2012

குர்ஆனைத் தொடமுடிந்த தூய்மையானவர்கள்!

முதல் பாகத்தைக் காண‌:-  திருக்குர்ஆனைத் தொடக் கூடாதாமே?!!

லுஹர் நேர தொழுகையை இருவரும் நிறைவேற்றிய பிறகு காமிலா தன் தாயாருக்கு விளக்க ஆரம்பிக்கிறாள்.

காமிலா: இப்போ சொல்லட்டா..ம்மா?

ரமீஸா: ம்... சொல்லு, சொல்லு..! இப்போ கொஞ்ச ஃப்ரீ டைம்தான நமக்கு.. அஸர் நேரம் வந்துட்டா தொழுதுட்டு இஃப்தார் வேலைகள ஆரம்பிக்கதான் சரியா இருக்கும்.


Thursday 9 August 2012

திருக்குர்ஆனைத் தொடக் கூடாதாமே?!!

ள்ளிக்குச் சென்று ரமலானின் இரவுத் தொழுகையை முடித்துவிட்டு வீட்டில் நுழைந்த‌ ரமீஸா, இளைய மகள் ஷாஹினா திருக்குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கும் சப்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தவளாக அவளை நோக்கி வேகவேகமாக சென்றாள்.

ரமீஸா: என்னடி... ஷாஹின்..! இப்படி குர்ஆனை ஓதிட்டிருக்கே..? நோன்பு நேரத்தில் இப்படி ஹராமான காரியத்த செய்துட்டியேடி...! இங்கே கொடு அதை!

என குர்ஆனைப் பிடுங்கி ஷெல்ஃபில் வைக்க....

ஷாஹினா: என்னமா சொல்றீங்க...?! குர்ஆன்தானே ஓதினேன்..? இது ஹராமா.. ம்மா?

Thursday 19 July 2012

ரமலானுக்கு தயாராவோமா?

ஒன்றுக்கு பலமடங்கு நன்மைகளை அள்ளித் தரும் புனிதமிக்க ர‌மலான் மாதம் நம்மை நெருங்கிவிட்ட நிலையில் அந்த ரமலானின் மகத்தான நாட்களை நாம் மறுமைக்கு பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ள இப்போதே நாம் தயாராக‌வேண்டும். குறிப்பாக குடும்பத் தலைவிகளாகிய பெண்கள் மற்ற நாட்களைவிட ரமலானில் செய்யவேண்டிய அமல்களையும், தவிர்ந்துக் கொள்ள வேண்டியவற்றையும், வீட்டு வேலைகளை எவ்வாறு குறைத்துக் கொள்வது என்பது பற்றியும் சில டிப்ஸ்களை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன். மற்ற பயனுள்ள டிப்ஸ்கள் உங்களிடமிருந்தால் அவற்றைப் பின்னூட்டத்தில் நீங்களும் பகிர்ந்துக் கொள்ளலாம்.

இப்படிலாம் வகை வகையா சாப்பிடவா ரமலான்?
சாப்பிடுங்க, ஆனா நிதானமா பார்த்து சாப்பிடுங்க :)

ரமலானுக்கு முன்னால் செய்யவேண்டிய...

Thursday 5 July 2012

பராஅத் இரவு ‍- பாவமா புண்ணியமா?


நம் இஸ்லாமிய மக்களில் இன்னும் அறியாத நிலையிலுள்ளவர்களுக்கு, ஷஃபான் மாதம் 15ஆம் இரவு, "ஷபே பராஅத்" அல்லது "பராஅத் இரவு" என்று மிக கோலாகலமாக கண்ணியப்படுத்தப்படும் ஒரு விழா கொண்டாட்டம்! இதை கொண்டாடுவதில் அறியாத மக்களோடு சேர்ந்து, ஹஜ்ரத்மார்கள் என்று சொல்லப்படும் ஆலிம்களும்(?) ஆர்வத்துடன் முன்னின்று நடத்தி வருகின்றனர். மார்க்கத்தின் பெயராலும், அமல்களின் பெயராலும் முன்னோர்கள் ஏற்படுத்தியவற்றை எல்லாம், அல்லாஹ்வும் அவனது ரசூலும் சொல்லியவைதானா என்று பார்க்காமல், இதற்கும் நன்மையுண்டு என்று தாங்களே தீர்மானித்துக் கொண்டு, அவற்றை குறிப்பிட்ட சில தினத்தில் நம் சமுதாய மக்கள் செய்து வருகின்றனர்.

Saturday 5 May 2012

பொய் சொல்லி வாழ்ந்தவர் இல்லை! (எதிர்ப் பதிவு)

 இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பான‌ சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு, (சுமார் 80 வருஷங்களுக்குப் பிறகு) இப்போது இந்திய நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருவது நாமறிந்ததே! அதுபற்றி வெளியிடப்ப‌ட்ட‌ ஒரு விழிப்புணர்வு கட்டுரையைப் படித்துச் சென்ற‌வர்களில் ஒருவரான சகோதரர் கோவி. கண்ணன், அதன் உண்மை நிலைத் தெரிந்தும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யும் வண்ணமாக சமீபத்தில் எழுதிய தன்னுடைய பதிவொன்றில் தவறான ஒரு கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் இன்னொரு சகோதரரும் நம் பதிவின் பின்னூட்டத்தில் அறியாப் பிள்ளைபோல் கருத்து தெரிவித்திருந்தார். அவர்கள் இருவருக்கும், இன்னும் இதுபோன்று ஒன்றுமில்லாத வெறும் வாய்க்கு அவல் மெல்லுபவர்களுக்கும், அதற்கு 'ஆமா சாமி' போடுபவர்களுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்! (என்னுடைய பதிவுலக வாழ்க்கையில் இதுதான் முதல் 'எதிர்ப் பதிவு'/'மறுப்பு பதிவு' என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.)

Wednesday 25 April 2012

முஸ்லிம்களின் கவனத்திற்கு ……! (சமூக, பொருளாதார, சாதிவாரி கணக்கெடுப்பு )


இந்தியாவில் உள்ள பல்வேறு சாதி மக்களின் சமூக, பொருளாதார, சாதி, கல்வி விபரங்களைத் தொகுப்பதற்காக சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கணக்கெடுப்பு ஏப்ரல் 23-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. 1931-ம் ஆண்டுக்குப் பிறகு இது மாதிரியான சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை. சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல் சாதிவாரி கணக்கெடுப்பு. இந்த கணக்கெடுப்பின் முடிவில் சாதிவாரி மக்கள் தொகை விபரம் துள்ளியமாக தெரியும்.

Tuesday 17 April 2012

ஃபிரான்ஸ் மக்களின் உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்குமா?


மேற்கத்திய நாடுகளிலேயே சக்தி வாய்ந்த நாடாக கருதப்படுவது ஃபிரான்ஸ் நாடு. இங்கு 2012 ம் ஆண்டிற்கான‌ ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்ட இந்நிலையில், இந்த மாதம் 9 ந்தேதி ஆரம்பித்த அதிகாரப்பூர்வமான தேர்தல் பிரச்சாரம் 21 ந்தேதி இரவு 12 மணி வரை தொடரும் என்பதால் பிரச்சாரங்கள் அனல் பறந்துக் கொண்டிருக்கின்றன.

Wednesday 11 April 2012

தொடரும் எச்சரிக்கைக‌ள்!

தன்னைத் தானே சுழன்றுக்கொண்டே விநாடிக்கு 30 கி.மீ. (மணிக்கு 108,000 கி.மீ.) வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருக்கும் பூமி சின்னதாக ஒரு குலுங்கு குலுங்கினாலே ஆங்காங்கே பூமி பிளக்கிறது. கட்டிட்டங்கள் சரிந்து கற்குவியல்கள் ஆகின்றன‌. அதன் அதிர்ச்சியில் அலைக்கழிக்கப்படும் அலைகள் ஊருக்குள் எகிறிப் பாய்ந்து 'சுனாமி'யாக பெயர் சூட்டப்படுகிறது. பல ல‌ட்சம் மக்கள் மண்ணுக்குள்ளும், கடலுக்குள்ளுமாக கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாய் மறைந்துப் போகிறார்கள். இவை அனைத்தும் இயற்கைதானா? இதன் பிண்ணனியில் இறைவனின் எச்சரிக்கை நமக்குத் தெரியவில்லையா?

Saturday 24 March 2012

"இன்சூரன்ஸ்" - சுருக்கமாக ஓர் விளக்கம்!


Insurance Policy


இவ்வுலகில் நம்முடைய‌ தேவைகள் அதிகமாகும்போது அதற்கேற்றவாறு வணிகங்களையும், உற்பத்திகளையும் பெருக்குவதோடு வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளையும் அமைத்துக் கொள்வது நமக்கு அவசியமாகி வருகின்றன. அதுபோன்ற அவசியத் தேவையாகிப்போன‌, வந்த பிறகு வருந்துவதைவிட வரும் முன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்ட முறைகளில் ஒன்றுதான் இன்றைய "இன்சூரன்ஸ்" முறையாகும்.

Wednesday 22 February 2012

"முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்" - தொகுப்பு


பிப்ரவரி 14 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய "முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம்" தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் 38 இடங்களில் நடந்தது. அதன் வீடியோ தொகுப்பை இங்கே காணலாம்:

Wednesday 15 February 2012

மரவள்ளிக் கிழங்கு அடை


தேவையான பொருட்கள்:

மரவள்ளிக் கிழங்கு - 600 கிராம்
கன்டன்ஸ்டு (சுகர்) மில்க் - 3 டேபிள்ஸ்பூன்
கன்டன்ஸ்டு (நான் சுகர்) - மில்க் 50 மில்லி
பசுநெய் - 3 டீஸ்பூன்
சீனி - (சுமார்) 150 மில்லி
முந்திரிப் பருப்பு - 2 பிடி
தேங்காய்த் துருவல் - 2 கப்
உப்பு - 2 டீஸ்பூன்

Monday 13 February 2012

'காதலர் தினம்' இளைஞர்களுக்கு சாபக்கேடு!

வாழ்க்கையில் எந்த ஒரு நெறிமுறைகளும் இல்லாமல் எதையும் பின்பற்றி, எப்படியும் வாழலாம் என்பவர்களைப் பற்றி நமக்கு கவலையில்லை. ஆனால் உண்ணும் முறையிலிருந்து வாழ்க்கையின் அத்தனை விஷயங்களுக்கும் அழகிய வழிமுறைகள் வகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கும் சமுதாய மக்களே இந்த கேடுகெட்ட காதலர் தினக் கொண்டாட்டங்களைக் கொண்டாடுவது என்பது மிகவும் வேதனையான விஷயம்தான்!

Thursday 9 February 2012

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"! (மீள்பதிவு)

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் விழிப்புணர்வு கட்டுரை

(நேசம் இணைய தளம் மற்றும் யுடான்ஸ் தளம் இணைந்து வழங்கும் கட்டுரைப் போட்டிக்காக இந்தக் கட்டுரை மறுபதிவு செய்யப்படுகிறது. இந்த மறுபதிப்பானது போட்டியின் நிபந்தனைக்குட்பட்டு இருப்பதால் முந்திய பதிவைவிட சுருக்கப்பட்டுள்ளது. கூடுதல் விளக்கத்துடன் பார்க்க விரும்புவோர் பழைய பதிவைப் பார்க்கவும்.)


Saturday 14 January 2012

'பொங்கல்' பொதுவான ஒரு திருநாளா?

முக்கிய குறிப்பு:

தமிழ் இஸ்லாமியர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை என்று கேட்கும் பல சகோதர சகோதரிகளுக்காக, இஸ்லாமியர்களின் சார்பில் விளக்கம் சொல்வதற்காகவே இந்த இடுகை! விளக்கத்தை புரிந்துக் கொண்ட பிறகு அழகிய முறையில் கருத்துக்களை பதியுங்கள். தயவுசெய்து விவாதிக்கவேண்டாம்! இதன் மூலம் 'பொங்கல்' சம்பந்தமாக இஸ்லாமியர்கள் மீதுள்ள‌ சிறு சிறு சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் களையப்பட்டு, நமக்கிடையே இருக்கும் சகோதரத்துவம் நீடிக்கவேண்டும் என்பதே நம் ஆவல்.


(குறிப்பு: சென்ற வருடம் 19/01/2011 அன்று வெளியிட்ட இந்தப் பதிவின்போது கேட்டுக் கொண்டது "தயவுசெய்து விவாதிக்கவேண்டாம்!" என்பது. நியாயமான சுய விளக்கங்களுக்குப் பிறகும் புரிந்துணர்வில்லாத சிலரும் இருக்கிறார்கள் என்பதால், தற்போது ஆரோக்கியமான விவாதத்தின் மூலமாவது புரியவைப்போம் என்ற நோக்கத்தில் "விவாதிக்கவேண்டாம்!" என்ற வேண்டுகோள் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. எனினும் எந்தக் கருத்துக்களாக இருந்தாலும் அழகிய முறையில் சொல்லுங்கள்.)



நன்றி கூகிள்

Friday 13 January 2012

ஒழியட்டும் 'ஒடுக்கத்து புதன்'!

ஸஃபர் மாதம் பிறந்து பாதி நாட்களுக்கும் மேல் ஓடிவிட்டன. இஸ்லாமிய வீடுகளில் ஒரே பரபரப்பு! அரிசியைக் கழுவி, காய வைத்து, இடித்து, சலித்து, பக்குவப்படுத்தி..... என்று ஏகப்பட்ட‌ முன்னேற்பாடுகள்! இருக்கும் உடுப்புகளில் பழைய துணிமணிகளைப் பொறுக்கி ஏழைகளுக்கு கொடுத்து கழித்துவிட வேண்டும் என்று ஓரம்கட்டி வைப்பார்கள். இதெல்லாம் எதற்காக..? ஸஃபர் மாதத்தின் கடைசி புதன் கிழமையான 'ஒடுக்கத்து புதன்' கிழமையைக் கொண்டாடவே! தயார்படுத்திய அரிசி மாவில் அன்றைய தினம் 'ஒரட்டி' என்று சொல்லப்படும் ஒரு வகை ரொட்டியைத் தயாரித்து, அதனுடன் சேவல் குழம்பு செய்வார்கள். அதற்காக கோழி வியாபாரிகளிடம் முன் கூட்டியே நாட்டுச் சேவல் ஆர்டர் பண்ணி வைக்கப்படும். முந்திய நாள் ஒட்டடை அடித்து, பழசு பட்டு நீக்கி, வீடு வாசல் கழுவி சுத்தம் செய்வார்கள்.


பயணிக்கும் பாதை